உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து நாடக ஆசிரியரும் படைப்பாளியுமான ஜார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) பிறந்த தினம் இன்று (ஜூலை 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அயர்லாந்தின் டப்ளின் நகரில் (1856) பிறந்தார். அரசு வேலையுடன் தானிய வியாபார மும் செய்துவந்த தந்தை, வருமானத்தை குடித்தே அழித்தார். வறுமையில் வாடிய குடும்பம், வீட்டு வாடகைப் பணம்கூட இல்லாமல், கடற்கரையில் ஓட்டைப் படகில் வசிக்க நேர்ந்தது. 10 வயதில் பள்ளியில் சேர்ந்தார். 4 ஆண்டுகள் மட்டுமே படித்தார்.
* புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடகியான தாய், சிறுவன் பெர்னாட் ஷாவையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்தார். வாரா வாரம் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார். சிறு வயதில் தாயிடம் கற்ற இசை, பின்னாளில் இவரை இசை விமர்சகராக மிளிரவைத்தது.
* இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.
* ‘விடோயர்ஸ் ஹவுசஸ்’ என்ற முதல் நாடகத்தை 1892-ல் எழுதினார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பல நாடுகளில் இவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
* அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் உற்சாகமான, சென்ட்டிமென்ட் நிறைந்த, பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றினார்.
* இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன. அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும். 5 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
* பிரிட்டன் சோஷலிஸ்ட் அமைப்பான ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் நிறுவனத்தை 1895-ல் தொடங்கினார்.
* நாவல் ஆசிரியர், கதாசிரியர், விமர்சகர், கடிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் சுமார் 2.50 லட்சம் கடிதங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. நாடகங்களுக்கு நீண்ட முன்னுரை எழுதுவார். இவை சில நேரம், நாடகத்தைவிட பெரிதாக இருக்கும். இவரது இசை விமர்சனங்கள் ஷா’ஸ் மியூசிக் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
* இலக்கியத்துக்காக நோபல் பரிசு (1925), பிக்மலியன் என்ற படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது (1938) ஆகிய இரண்டு பிரதான விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி இவர். புகை, மது தொடாதவர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றியவர்.
* தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக மாநாடுகளுக்குச் செல்வதும் உரையாற்றுவதுமாக சுழன்றார். படிப்பதையும் எழுதுவதையும் இறுதிவரை நிறுத்தவே இல்லை. ஆங்கில இலக்கிய உலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெர்னாட் ஷா 94 வயதில் (1950) மறைந்தார்.
No comments: