2015 - TAMIL BIOGRAPHY

Tuesday, 1 September 2015

முத்துலட்சுமி ரெட்டி 10

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy) பிறந்த தினம் இன்று (ஜூலை 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தவர் (1886). தந்தை பிரபல வழக்கறிஞர். தாயார், பிரபல பாடகர். பருவமடைந்த பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினால் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் தந்தையின் உதவியுடன் தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடமும் பெற்றார்.
l இவர் கல்லூரியில் சேர புதுக்கோட்டை மன்னர் சிறப்பு ஆணை பிறப்பித்ததோடு உதவித் தொகையும் வழங்கினார். எதையும் தடைக்கற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக ஏற்ற இந்த அசாதாரணப் பெண்மணி, ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி சரித்திரம் படைத்தார்.
l சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினார். இவரது அறிவாற்றலை அறிந்த அரசு, பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேஷப் பயிற்சி பெற உபகாரச் சம்பளம் கொடுத்து, அவரை இங்கிலாந்து அனுப்பியது.
l மருத்துவம் தவிர சமூக சேவைகளில், குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, சுகாதாரம், ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடு கொண்டிருந்தார்.
l நாட்டின் முதல் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி இறுதிவரை அதன் தலைவியாக செயல்பட்டார். மாதர் சங்கம் நடத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தர்மம்’ என்ற மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் இவர்தான்.
l மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சட்டமன்றத்தின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். 1925-ல் சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்கள் தடைச் சட்டம், ஏழைப்பெண்களுக்கு இலவசக் கல்வி ஆகிய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றினார்.
l ஆதரவற்ற குழந்தைகளுக்காக அடையாறில் அவ்வை இல்லம் தொடங்கினார். புற்றுநோய் கண்ட தன் தங்கை இளம் வயதில் இறந்ததும், ஒரு டாக்டராக இருந்தும் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனதும் இவரை மிகவும் பாதித்தது.
l இந்தத் துயரம் மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதால், 1925-ல் லண்டன் சென்ற இவர், செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா திரும் பிய இவர், சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் முயன்று 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.
l தற்போது ஆசியாவிலேயே புற்றுநோய் சிகிச்சைக்கு சிறந்த இடமாக கருதப்படும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது அயராத முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.1936 முதல் முழு நேர மருத்துவராக செயல்படத் தொடங்கிய இவர், மீனவக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டார். பல நூல்களை எழுதினார்.
l ஈடிணையற்ற சமூக சேவைகளுக்காக பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளும், கவுரவங்களும் பெற்றார். மகத்தான சமூக சேவகியும், தலைசிறந்த மருத்துவரும், பெண்களின் முன்னேற்றத் திற்காக பாடுபட்டவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 1968-ல் 82-ம் வயதில் மறைந்தார்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா 10

உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து நாடக ஆசிரியரும் படைப்பாளியுமான ஜார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) பிறந்த தினம் இன்று (ஜூலை 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அயர்லாந்தின் டப்ளின் நகரில் (1856) பிறந்தார். அரசு வேலையுடன் தானிய வியாபார மும் செய்துவந்த தந்தை, வருமானத்தை குடித்தே அழித்தார். வறுமையில் வாடிய குடும்பம், வீட்டு வாடகைப் பணம்கூட இல்லாமல், கடற்கரையில் ஓட்டைப் படகில் வசிக்க நேர்ந்தது. 10 வயதில் பள்ளியில் சேர்ந்தார். 4 ஆண்டுகள் மட்டுமே படித்தார்.
* புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடகியான தாய், சிறுவன் பெர்னாட் ஷாவையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்தார். வாரா வாரம் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார். சிறு வயதில் தாயிடம் கற்ற இசை, பின்னாளில் இவரை இசை விமர்சகராக மிளிரவைத்தது.
* இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.
* ‘விடோயர்ஸ் ஹவுசஸ்’ என்ற முதல் நாடகத்தை 1892-ல் எழுதினார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பல நாடுகளில் இவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
* அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் உற்சாகமான, சென்ட்டிமென்ட் நிறைந்த, பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றினார்.
* இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன. அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும். 5 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
* பிரிட்டன் சோஷலிஸ்ட் அமைப்பான ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் நிறுவனத்தை 1895-ல் தொடங்கினார்.
* நாவல் ஆசிரியர், கதாசிரியர், விமர்சகர், கடிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் சுமார் 2.50 லட்சம் கடிதங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. நாடகங்களுக்கு நீண்ட முன்னுரை எழுதுவார். இவை சில நேரம், நாடகத்தைவிட பெரிதாக இருக்கும். இவரது இசை விமர்சனங்கள் ஷா’ஸ் மியூசிக் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
* இலக்கியத்துக்காக நோபல் பரிசு (1925), பிக்மலியன் என்ற படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது (1938) ஆகிய இரண்டு பிரதான விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி இவர். புகை, மது தொடாதவர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றியவர்.
* தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக மாநாடுகளுக்குச் செல்வதும் உரையாற்றுவதுமாக சுழன்றார். படிப்பதையும் எழுதுவதையும் இறுதிவரை நிறுத்தவே இல்லை. ஆங்கில இலக்கிய உலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெர்னாட் ஷா 94 வயதில் (1950) மறைந்தார்.
செம்பை வைத்தியநாத பாகவதர் 10

கர்னாடக இசை உலகில் 70 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidhyanatha Baghavathar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l கேரள மாநிலம் பாலக்காடு அருகே செம்பை என்ற கிராமத் தில் (1896) பிறந்தார். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் அனைவரும் கர்னாடக இசைக் கலைஞர்கள். இசை இவரது குடும்ப பாரம்பரியமாகவே விளங்கி யது.
l தந்தையிடம் 3 வயதில் இசை கற்கத் தொடங்கினார். சகோதரர் சுப்பிரமணிய பாகவதருடன் ஒட்டப்பாலம் கிருஷ்ணன் கோயிலில் முதல் கச்சேரி 8 வயதில் அரங்கேறியது.
l தன் சகோதரருடன் சேர்ந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். 1914-ல் இருவரும் சேர்ந்து ‘செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவைத் தொடங்கினர். ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த விழா இன்றுவரை தொடர்கிறது.
l ஹரிகதையில் புகழ்பெற்று விளங்கிய நடேச சாஸ்திரிகள், செம்பை சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு வியந்தார். அவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்து, தான் ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் கதைச்சூழலுக்கு ஏற்ப அவர்களைப் பாடவைத்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
l தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. பல சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். கிராமஃபோன் இசைத்தட்டுகளிலும் அவரது பாடல்கள் வெளியாயின.
l தனித்துவம் வாய்ந்த குரல் இனிமையால் வைத்தியநாத பாகவதரின் புகழ் மேன்மேலும் பரவியது. அதிக கச்சேரி வாய்ப்புகள் வந்ததால் 1945-ல் சென்னை சாந்தோமில் குடியேறினார். ‘குருவாயூர் ஏகாதசி’ நாளில் சீடர்களுடன் அங்கு கச்சேரி நடத்துவார். கம்பீரமான, கணீரென்ற குரல்வளம் படைத்த அவரது பாடல்கள் கேட்போரை மெய்மறக்க வைக்கும். ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கடைசி வரிசையில் உள்ளவர்களுக்கும் கேட்கும்.
l வளரும் இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்துவார். சீடர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஊக்குவிப்பார். பக்கவாத்தியக்காரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உரிய வாய்ப்பளிப்பார்.
l தொண்டையில் ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டு அவரால் பாடமுடியாமல் போனது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. குருவாயூரப்பன் சன்னதியில் மனமுருக வேண்ட, உடனடியாக பாடத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
l கேரளாவிலும் தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு. ஜெயன்-விஜயன் இரட்டையர், கே.ஜே.ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், வி.வி.சுப்பிரமணியம், பி.லீலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கர்னாடக இசை உலகில் ‘செம்பை’ என்று, தான் பிறந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறார். ‘காயன காந்தர்வ’, ‘சங்கீத கலாநிதி’, ‘பத்ம பூஷண்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
l சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் 78-வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு ‘செம்பை விருது’ வழங்கப்படுகிறது.

@templatesyard